Thursday, August 26, 2010

பஸ்கர் முதல் ஆஸ்கர் வரை


1987 களில் ஆஸ்த்ரேலியாவின் தெருக்களில் பஸ்கிங்
செய்து கொண்டிருந்த இளைஞன்
(busking-நடை பாதைகளில் இசை வாத்தியங்களுடன் பாடி மக்களிடம் பொருள் பெறுவது)
"I just want to be like Marlon Brando". என்கிற பாடலை எழுதி மேடை ஏற்றுகிறான்.
நண்பர்கள் சிரிக்கிறார்கள்,கூட்டம் வியப்படைகிறது.

பஸ்கிங்க் செய்து கொண்டிருந்த அதே இளைஞன் 2000 ஆம் ஆண்டு மார்லன் ப்ராண்டோ நின்ற அதே ஆஸ்கர் மேடையில் ரஸல் க்ரோவாக நிற்கிறார்.
'க்ளேடியேட்டர்'(Gladiator) படத்தில் அவர் ஏற்று நடித்த 'மெக்ஸிமஸ் டெஸிமஸ் மேரிடியஸ்'(Maximus Decimus Meridius) பாத்திரத்துகாக மிக உயரிய அந்த விருது கொடுக்கப்பட்டது.

ரஸல் க்ரோவின் ஏற்புரை பின்வருமாறு அமைந்தது,


"நீங்கள் சிட்னி,ஆக்லெண்ட்,நியு கெஸ்ட்ல்...அல்லது உலகின் எந்த பெரு நகரங்களில் உள்ள புறநகரத்தின் ஒதுங்கியதெருக்களுக்குச் சென்றாலும் ...இது போன்ற ஒரு கனவு தவறான அல்லது அடையமுடியாத ஒரு கனவாகவே தோன்றும்...ஆனால் இந்த கனம் ஒரு குழந்தையின் கனவோடு நேரடியாக தொடர்புடையது...எவன் ஒருவனுக்கு சாதகத் தன்மை துனை நிற்கிறதோ,எவன் ஒருவன் முழுமையாக தைரியத்தை மட்டுமே நம்புகிறானோ அவனை போன்றவனுக்கு இத்தகைய கனவு நிச்சயம் சாத்தியப்படும்....மிக்க நன்றி....".

Monday, August 16, 2010

சிதைவு-2

விட்டத்தில் இரட்டைமுடிபோட்ட
கயிரு ஒன்று என் கழுத்து எழும்பினை முறிப்பதற்காக காற்றில் அசைந்த வண்ணம் உள்ளது

கட்டிலின் கால்களுக்கிடையில்
ஒற்றைக் கண்கொண்ட பாம்போன்று என்னைத் தீண்டுவதற்காய் படமெடுத்தபடி மேலேறுகிறது

குளியலைறையின் குழாய் வழியே
கருமைநிற அட்டைகள் என் ரத்தத்தை உறிஞ்சுவதற்காக கொட்டுகின்றன

கழிவறையின் மழக்கழிவுகளில்
என் உணவினை பாழ்படுத்தும் கரப்பான்பூச்சிகள் இனப்பெருக்கம் செய்வதற்காக முட்டையிடுகின்றன

அகோரப்பசிக் கொண்ட கருத்த எலிகள்
என் கால்சட்டைகளை கடித்து
என்னை நிர்வானப்ப்டுத்துகின்றன

புத்தகச் சந்துகலையெல்லாம்
உண்டுவிட்ட அறிப்பெடுத்த கரையாண்கள் என் மூளையையும் செல் அறித்து விட்டன

வெறிகொண்ட நாயோன்று
என் பின்பக்க கறியை ருசிப்பதற்காக எச்சில் ஒழுக என் வீட்டு வாசலில் படுத்துகிடக்கிறது

நான் இறந்தபிறகு
என் மிச்சங்களை உண்பதற்காக பிணந்திண்ணி புழுக்கள் தோட்டத்தில் அருவருப்பாய் நெளிகின்றன.

உன் நினைவுகளோடு சிரமில்லாமல் உறங்கி கொண்டிருக்கிறேன்.

Sunday, August 15, 2010

சிதைவு-1

நீ இல்லாத இரவுகளை எப்படி நான் கழிப்பது...

கம்பிகள் அறுபட்டு ,செல்லரித்துபோன
இல்லாத வயலின் ஒன்றில் சோக கீதம் வாசித்து கொண்டிருக்கலாம்.

காற்றில் என்றோ கலந்துவிட்ட
உன் வாசனைக்காய் என் நுரையீரல் செல்கள் ஏங்கி கொண்டிருக்கலாம்.

உனக்கான என் கவிதைகளை
படைப்பதற்காக வார்த்தைகளை தேடித் திருடிக் கொண்டிருக்கலாம்

இல்லாத அல்லது பிறக்க போகும்
நம் குழ்ந்தைக்காய் ஒரு தாலாட்டு கவிதை எழுதி கொண்டிருக்கலாம்.

உன் சாயல் கொண்ட
ஏதாவுது ஒரு பெண்ணிடம் நான் உனையே தேடி கொண்டிருக்கலாம்.

நீல நிற புடவை ஒன்றை
நீ கட்ட தெரியாமல் கட்டும் அழகை நான் ரசித்து கொண்டிருக்கலாம்.

என் தூரிகைககள் தீட்டிய
உன் அரைகுறை ஓவியத்தை முடிக்க முடியாமல் திணறி கொண்டிருக்கலாம்.

உன் உதடுகளை மறப்பதற்காக
இரண்டாவது காதலியான என் வென்சுருட்டை முத்தமிட்டு கொண்டிருக்கலாம்.

நீ அவசரத்தில் முடிக்காமல்
விட்டுச் சென்ற உரையாடல்களின் அலைவரிசையை இந்த பிரபஞ்சத்தில் தேடிகொண்டிருக்கலாம்.

நீ இல்லாவிடிலும் வெறுமையான
என் இரவுகளை உன்னோடு நான் காதலித்து கொண்டிருக்கலாம்.

நீ இல்லாத இரவுகளை எப்படி நான் கழிப்பது...

Thursday, August 12, 2010

"பொம்மைகள்-ஒரு போதும் யாரையும் கைவிடுவது இல்லை"

ஒரு சில நிழற்படங்களிலும்,காதி கிராமயோதியா பவன் ஷோக்கேசிலும்...
சென்னையில் ஏதோ ஒரு இடத்தில் சிலை போன்ற வடிவமாகவும்
சில ஓவியர்களின் கோடுகளாக மட்டுமே மரப்பாச்சிப்பொம்மைகள் காட்சி படிமங்களாக என் நினைவில் படிந்துள்ளது
அந்த பொம்மைகளின் கருமை நிறமும்,வடிவமும் என் கனவுகளில் அவ்வப்போது சூல்கொள்வதும் உண்டு....
நகரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் எனக்கு மரப்பாச்சிப்பொம்மையின் நட்பு கிடைக்காமலேயே போய்விட்டது

"எனக்கு மரப்பாச்சிப்பொம்ம வாங்கி கொடுத்துருக்கியா அம்மா" என்று கேட்டதற்கு
தொலைந்து போன அவளின் மரப்பாச்சிப்பொம்மைப் பற்றி பேச தொடங்கிவிட்டாள் என் அம்மா
"அந்த பொம்மைங்க எல்லாம் எங்க காலத்திலியே இல்லாம போச்சு"-
என்ற அவளது பெருமூச்சில் பொம்மை கேட்டு அழுகும் ஒரு சிறு குழந்தையின் விசும்பலை என்னால் கேட்க முடிந்தது....

குழந்தைகளுக்கு உடம்புக்கு முடியமல் போனால் மரபாச்சி பொம்மையை தண்ணியிட்டு உரசி நெற்றியில் தேய்ப்பார்களாம்..
ஆங்கிலத்தில் கூறப்படும் பல விதமான "healing therapy" களோடு இதை ஒப்பிடலாம் என்றே தோன்றுகிறது
கிட்டத்தட்ட ஒரு தலைமுறையே மரப்பாச்சிப்பொம்மைகளை பிரக்ஞையே இல்லாமல் ஒதுக்கியிருக்கிறது.

ஒரு மரப்பாச்சிப்பொம்மையை வாங்கி பிறந்தநாள் பரிசாக ஒரு குழந்தைக்காவது கொடுத்து விடவேண்டும் என்று திண்ணமாக முடிவெடுத்தேன்....
அப்படி ஒரு பிறந்த நாளுக்குகாக சில காலம் காத்திருக்க வேண்டியும் இருந்தது ......
அன்றும், வழக்கம் போல அவசரப் புறப்படலுக்கு இடையில் மரப்பாச்சிப்பொம்மையின் நினைவோடு காதி பவனுக்குச் சென்றேன் ஸ்டாக் இல்லையென்று சொன்னார்கள்
அவர்களிடமே எங்கே மரப்பாச்சிப்பொம்மைகள் கிடைக்கும் என்று விசாரித்து விட்டு ,
ஒரு கடைக்குச் சென்றேன் அங்கே மரப்பாச்சிப்பொம்மை ஒன்றை கண்டேன் சிறிது அளவு நான் அறிந்திருந்த மரப்பாச்சிப்பொம்மைகளோடு அது ஒத்தும் இருந்தது...

"இது பெரிசு விலை ரூபாய் 400" என்றார் கடைக்காரர்

கொஞ்சம் அதிர்வாக இருந்தது பையில் ரூபாய் 300 மட்டுமே இருந்தது, ஏதாவது ஒரு பொருளை வாங்கியே ஆக வேண்டிய கட்டாயம் ,அவசரம் வேறு.

பக்கத்தில் ஒரு பார்பி பொம்மை தனக்கே உரிய அலங்காரத்தோடு நின்றுகொண்டிருந்தது
கடைக்காரர் "சார் இந்தியன் பார்பி சார் 200 ரூபா தான் சார் "என்றார்.

வேறு வழி தெரியாமல் பார்பியை வாங்கி கனத்த மனதோடு பையில் அடைத்து கொண்டேன். மரப்பாச்சிப்பொம்மயை திரும்பி பார்க்க மனமில்லாமல் வெளியெறினேன்.

"என் புள்ளைங்கலயெல்லாம் காணமுன்னு பொம்மைங்கயெல்லாம் விசும்புதே".மிருகவிதூஷகம் நாடகத்தில் ச.முருகபூபதி அவர்கள் எழுதிய வசனம் என் நினைவில் ஏனோ வந்து போனது.....

உடல் மொழியே -ஆதி மொழி


வேட்டையில் கிடைத்தவற்றை ஆதி மனிதன் தன் இனக் குழுவிற்கு கொண்டு வருகிறான்...
காடு மலை திரிந்த அவனது அனுபவங்கள் அவனை கதை சொல்ல வைக்கிறது...
உணவு தயாராவதற்குள் தன் குழுவைச் சார்ந்த குழந்தைகளுக்கும் பெண்களுக்கும்...
அவன் வேட்டையாடிய கதைகளை தன் உடல் மொழியின் மூலமாகவும் ஒசையின் மூலமாகவும் விளக்குகிறான்
மொழி தோன்றுவதற்கு முன்பே உடல்மொழி தோன்றிவிடுகிறது.

வார்த்தைகளற்ற அந்த கானகத்தின் ஒசைகளும் உடல் அசைவுகளும் அவன் வேட்டையாடிய அனுபவங்களை கதைகளாக உருப்பெறச் செய்கின்றன ...
நடிப்பை உருவாக்குகிறோம் என்று உணராமலேயே கதைச்சொல்லியாகவும், நடிகனாகவும் உருமாறுகிறான்...
கதைகளை சுவாரஸ்யபடுத்த வண்ணங்களை மேலே பூசி கொள்கிறான்...
இசையை முறைப்படுத்துகிறான் ...
ஆயுதங்களை கலைக் கருவிகளாக மாற்றுகிறான்...
முதல் நாடகம் உருப்பெறுகிறது.

ஓசையின் தொன்மையை எப்படி நாம் இயற்கையின் தொன்மையொடு தொடர்புபடுத்திக் கொள்வது போல்,
உடல் மொழியின் தொன்மையையும் உயிர் உருவாக்கதின் தொன்மையொடு நாம் தொடர்புபடுத்திக் கொள்ள வேண்டும்....
மொழியின் மூலவடிவமாக ஓவியங்களைச் சொல்கிறோம்
ஆனால், அதனை விடவும் தொன்மையானது உடல்மொழி...
மனிதன் வரைகலையை உருவாக்குவதற்கு முன்பே உடல்மொழியைமுறைபடுத்திவிடுகிறான்.

உடல் மொழியின் பரிணமித்த வடிவமே நடிப்பென்று நம்மால் அனுமானம் செய்ய முடிகிறது ...

மனிதகுலத்தின் ஆதிமொழி- இன்று நடிப்பாக பரிணமித்து உள்ள உடல்மொழியே ஆகும்.